பொறியியல் பாடத்தில் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் பிஎஸ்சி கணித பட்டதாரிகள் பொறியியல் பட்டப்படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர (லேட்ரல் என்ட்ரி முறை) மே 17 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பொறியியல் பாடத்தில் டிப்ளமோ (பாலிடெக்னிக்) பெற்ற வர்கள், பிஎஸ்சி பட்டதாரிகள் (கணிதம்) “லேட்ரல் என்ட்ரி” முறையில் பிஇ, பிடெக் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம். இந்த முறையின்கீழ் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்களில் 2017-18-ம் கல்வி ஆண்டில் சேர மே 17 முதல் ஜுன் 14-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள முகவரிகள்:- www.accet.co.in, www.accet.edu.in, www.accetlea.com
ஜூன் 14-ம் தேதிக்குள்..
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதை பிரின்ட் அவுட் எடுத்து அத்துடன் தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.300-க்கு டிமாண்ட் டிராப்ட் (“The Secretary, second year BE, BTech Degree Admissions - 2017-18, ACCET, Karaikudi” என்ற பெயரில்) ஆகியவற்றை ஜூன் மாதம் 14-ம் தேதிக்குள் காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அனுப்ப வேண்டும்.
கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முக வரிகளில் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.