திருவாரூர்: திருவாரூர் அருகே மடப்புரத்தில் உள்ள நெல் சேமிப்புக் கிடங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
2 நாள் பயணமாக திருவாரூருக்கு நேற்று மாலை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, மாவட்ட எல்லையான கோவில்வெண்ணி பகுதியில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, எஸ்.பி சுரேஷ் குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். திமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான பூண்டி கலைவாணன் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், நீடாமங்கலம் வழியாக திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்துக்கு முதல்வர் வந்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நேற்று மாலை, காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்துக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், திமுக அறக்கட்டளை மூலம் ரூ.12 கோடி மதிப்பில் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகத்தை ஆய்வு செய்தார். அதன் பின்னர், திருவாரூர் அருகே மடப்புரத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணொலி வாயிலாக சென்னையில் இருந்து திறந்து வைத்த நெல் சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, திருவாரூர் கமலாலய தெப்பக்குளத்தின் மையத்தில் உள்ள நாகநாத சுவாமி கோயிலுக்கு படகில் சென்றார். அவருடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோரும் சென்றனர்.