தமிழகத்தில் தேசிய, மாநில நெடு ஞ்சாலைகள் அருகே செயல்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டதால் கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் 30 சதவீதம் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகளையும், மதுபானக் கூடங்களையும் மார்ச் 31-க்குள் மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு நிராகரிக் கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேசிய, மாநில நெடு ஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்பட்ட 3,200 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்ட பிறகு தமிழகத்தில் விபத்துகள் குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. பொது வாக விபத்துகளில் சிக்கும் வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பார்வையிட்டு சான்றிதழ் அளிப்பது வழக்கம். இந்த ஆய்வுக்காக விபத்தில் சிக்கிய வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குக் கொண் டுவரப்படும். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பிறகு விபத்தில் சிக்கிய வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குக் கொண்டுவருவது குறைந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் செல்லும் என்.எச்.45-பி, என்.எச்.7 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெற்ற விபத்துகளில் மார்ச் மாதத்தைவிட ஏப்ரல் மாதத்தில் 30 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் மாதம் 50 முதல் 60 உயிரிழப்பு விபத்துகள் நடைபெறும். ஏப்ரல் மாதம் 40 உயிரிழப்பு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மதுபானக் கடைகள் மூடப்பட்ட பிறகு மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி, ஊராட்சி சாலைகளிலும் விபத் துகள் குறைந்துள்ளன.
இதுகுறித்து சாலை பாதுகாப்பு ஆர்வலர் ஆர்.கோடீஸ்வரன் கூறியதாவது: மதுவால் விபத்துகள் நடைபெறுவது தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது. பிராணிகள் குறுக்கீடு, ஆட்டே ாக்களில் அனுமதிக்கப்பட்ட எண் ணிக்கையைவிட அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், செல் போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுதல் ஆகிய காரணங்களால் மற்ற விபத்துகள் ஏற்படுகின்றன.
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பது மட்டும் இல்லாமல், உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும் என போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை அமல் படுத்துவதுடன், சாலைகளில் பழுதையும் நீக்கினால் விபத்துகள் மேலும் குறையும் என்றார்.