தமிழகம்

சென்னைக்கு ஜூன் 3-வது வாரத்தில் போரூர் ஏரி நீர் கிடைக்கும்: குஜராத்தில் இருந்து சுத்திகரிப்பு கருவிகள் வருகின்றன

செய்திப்பிரிவு

போரூர் ஏரி நீரை குடிநீராக மாற்றி விநியோகிக்க ஜூன் 3-வது வாரத்தில் இருந்து வாய்ப்புள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

வறட்சியால் சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களான 4 ஏரிகளும் வறண்டுவிட்ட நிலையில், மாநகரின் கோடைகால நீர் தேவையை பூர்த்தி செய்ய, மாற்று நீர் ஆதாரங்களை குடிநீர் வாரியம் தேடி வருகிறது. அதன்படி, போரூர் ஏரியில் உள்ள நீரை சுத்திகரித்து சென்னை மக்களின் குடிநீர் விநியோகத்துக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அப்பணியின் தற்போதைய நிலவரம் குறித்து, சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, போரூர் ஏரியில் உள்ள நீரை குடிப்பதற்கு உகந்ததா என பரிசோதித்ததில், குடிப்பதற்கு உகந்தது என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அதே இடத்தில் சுத்திகரித்து, குடிநீராக்கி விநியோகிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. காலக்கெடு முடிந்து ஒப்பந்ததாரரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூன் 3-வது வாரத்தில் குடிநீர் விநியோகிக்க இலக்கு நிர்ணயித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான கருவிகள் குஜராத் மாநிலத்தில் இருந்து வருகிறது. இந்த ஏரியில் இருந்து தினமும் 4 மில்லியன் லிட்டர் குடிநீர், 3 மாதங்களுக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT