தமிழகம்

மீண்டும் ஊருக்குள் புகுந்த மக்னா காட்டு யானை: பொள்ளாச்சியில் இரண்டு குழுக்கள் கண்காணிப்பு

எஸ்.கோபு

பொள்ளாச்சி: தருமபுரி மாவட்டத்திலிருந்து கடந்த 5.ம் தேதி பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனப் பகுதியில் விடப்பட்ட மக்னா காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சி பகுதியில் ஊருக்குள் புகுந்ததுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் மக்னா காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டங்களில் சேதம் செய்து வந்தது.

இதையடுத்து பொள்ளாச்சியை அடுத்த கோழிகமுத்தி முகாமில் இருந்து கும்கி யானை சின்னதம்பி வரவழைக்கப்பட்டு கும்கி யானை உதவியுடன் வனத் துறையினர் கடந்த பிப்ரவரி 5ம் தேதி அன்று மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானையை பிடித்தனர். பின்னர், டாப்சிலிப் அருகே உள்ள வரகளியார் வனப்பகுதியில் 6ம் தேதி அன்று யானை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

வனப்பகுதியில் விடப்பட்ட யானையை வனத்துறை அதிகாரிகள் தனி குழு அமைத்து மக்னா காட்டு யானையை கண்காணித்து வந்த நிலையில் நேற்று இரவு அந்த யானை வனத்தை விட்டு வெளியேறி சேத்துமடை கிராமம் வழியாக நுழைந்து, நல்லூத்துக்குளி, கா.க.புதூர், ஆத்து பொள்ளாச்சி, ராமபட்டினம் செல்லாண்டி கவுண்டனூர், களத்தூர் தேவம்பாடி வலசு உள்ளிட கிராமங்களை கடந்து, கிராமத்தில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. பொள்ளாச்சி வனச்சரக அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து யானையின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT