தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் நடப்பாண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழையில் இலை கருகல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் வாணியாறு ஆணை மற்றும் வறட்டாறு அணை பகுதிகளை ஒட்டி உள்ள பாசனப் பகுதிகளில் அதிக அளவில் வாழை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர கடந்த மூன்று ஆண்டுகளாக பெய்து வரும் பருவமழை காரணமாக நீர் நிலைகளில் தட்டுப்பாடு இல்லாத அளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் மஞ்சள், கரும்பு பயிரிட்ட விவசாயிகள் இவ்வருடம் வாழை பயிரிட்டுள்ளனர் இது தவிர பாக்கு மற்றும் தென்னை மரக் கன்றுகளுக்கு ஊடுபயிராக நிழல் தரும் வகையிலும் வாழைகள் நடப்பட்டுள்ளது.
தற்போது தென்கரைக்கோட்டை ராமியனஅள்ளி, மோளையானுார், மெனசி, பூதநத்தம், அச்சல்வாடி கீரைப்பட்டி ,வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக கர்த்தானுார், அண்ணாமலைஅள்ளி, ராமியம்பட்டி பகுதியில் வாழையில் இலை கருகல் நோய் தாக்குதலும் ,சிறு இலை வைரஸ் நோய் தாக்குதலும் வேகமாக பரவி வருகின்றது.
சிக்கடோக்கா எனப்படும் பூஞ்சையால் வாழை இலை கருகி மரம் முழுவதுமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளது, வாழைக் கன்றுகள் தலா ரூ.12 முதல் 15 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி குழி வெட்டு கூலி நடவு கூலி என ஏக்கருக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் விவசாயிகள் தற்போதைய நோய் தாக்குதல் காரணமாக பெரிய பாதிப்பை அடையும் சூழல் உள்ளாகியுள்ளது. எனவே இந்த நோயை கட்டுப்படுத்த உடனடியாக தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.