தமிழகம்

மருந்து வணிகர்கள் கடையடைப்பு: தமிழகத்தில் ரூ.30 கோடி வர்த்தகம் பாதிப்பு - சங்கத்தின் மாநில தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

மருந்து வணிகர்கள் நேற்று நடத் திய கடையடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ராமச் சந்திரன் தெரிவித்தார்.

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் மருந்துக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 40 ஆயிரம் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் சுமார் 4 ஆயிரம் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள், கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் அப்துல் காதரிடம் கேட்டபோது, “அவசர தேவைக்கு மருந்துகள் வேண்டுமென்றால் பொதுமக்கள் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் பரவலாக மருந்து தேவைக்காக மக்கள் தொடர்புகொண்டனர். அவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள திறந்திருந்த மருந்துக் கடைகளில் இருந்து தேவையான மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டன. மற்றபடி எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார்.

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் கூறும்போது, “சென்னையில் அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர் மற்றும் மதுரையில் சில மருந்துக் கடைகள் மட்டும் மூடப்படவில்லை. ஆனால் அங்கு மருந்து வணிகர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மருந்துகளை விற்பனை செய்தனர். மாலையில் மருந்துக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன.

வழக்கமாக மருந்துகளை வாங்குபவர்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டம் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. அதனால் அவர்கள் தேவையான மருந்துகளை வாங்கி வைத்துக்கொண்டனர். மருந்துக் கடைகளுக்கு அருகில் கிளினிக் வைத்திருக்கும் டாக்டர்களுக்கு தேவையான மருந்துகளை கொடுத்துவிட்டோம். அதனால் மருந்துக் கடைகள் அடைப்பால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை” என்றார்.

மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பை கண்டித்து ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி நேற்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மருந்துக்கடை மூடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT