சென்னை: வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்தி நாளன்று அபிஷேகத்துக்காக பக்தர்கள் கொடுத்த பால் பாக்கெட்களை கோயில் நிர்வாகம் குப்பைத்தொட்டியில் வீசியது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில், 500 ஆண்டுகள் பழமையானது. அங்கு கடந்த18-ம் தேதி நடந்த மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அன்றிரவு தொடங்கி விடிய விடிய 4 காலபூஜை நடந்தது. 4 கால பூஜையிலும் சுவாமிக்கு அனைத்துவித அபிஷேகங்களும் செய்யப்படும்.
இந்நிலையில், அபிஷேகத்துக்காக பக்தர்கள் பால் பாக்கெட்களை வழங்கியுள்ளனர். ஆனால், அதை அபிஷேகத்துக்கு பயன்படுத்தாமல், குப்பைத் தொட்டியில் கோயில் நிர்வாகம் வீசியுள்ளதாக புகார் எழுந்தது.
குப்பைத் தொட்டியில் 200-க்கும் மேற்பட்ட பால் பாக்கெட்கள் வீசப்பட்டது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இதற்கு பால் முகவர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.
பக்தர்கள் வேதனை: இதுகுறித்து அப்பகுதி பக்தர்கள் கூறியதாவது: மகா சிவராத்திரி நாளன்றுஇரவு முழுவதும் விழித்திருந்துசிவனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்ற நம்பிக்கையோடு, அகஸ்தீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தோம். ஒவ்வொரு காலபூஜைக்கும் சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. குடும்பபிரச்சினைகள் தீர்வதற்காக, வேண்டிக்கொண்டு அபிஷேகத்துக்கு பால் பாக்கெட்களை வழங்கினோம்.
ஆனால், கோயில் ஊழியர்கள் ஒருசில பால் பாக்கெட்களை மட்டும்பயன்படுத்திவிட்டு, மற்ற பாக்கெட்களை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். இதை பார்த்தபோது மிகவும் வேதனையாக இருந்தது.
கெட்டுப்போன பால்: இதுகுறித்து கேட்டால், பால் பாக்கெட்கள் கெட்டுப் போனதாக தெரிவிக்கின்றனர். பாக்கெட்களை உடைக்காமல், கெட்டு போன பால் என எப்படி கூற முடிந்தது? பாக்கெட்டை உடைக்காமலே அதன் தரத்தை கண்டறிய ஏதேனும் நவீன கருவி கொண்டு சோதனை செய்தார்களா? கோயில் ஊழியர்களின் செயல் வேதனை அளிக்கிறது. இனி எந்த கோயிலிலும் இதுபோல நடைபெறாமல் இருக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் அளித்த விளக்கத்தில், ‘கோயிலில் நடைபெற்ற 4 கால பூஜையில், ஒவ்வொரு காலத்துக்கும் பக்தர்கள் கொண்டு வந்த பால் பாக்கெட்கள் முழுவதும் பயன்படுத்தப்பட்டன. 4-ம் கால பூஜை முடிந்த பிறகு பக்தர்களால் கொண்டு வரப்பட்ட பால் பாக்கெட்கள் கோயிலில் காலசந்தி மற்றும் கால பூஜைக்கு பயன்படுத்தப்பட்டது.
உச்சி கால பூஜைக்கு பயன்படுத்தியபோது 10 முதல் 15 பால் பாக்கெட்கள் கெட்டுப் போயிருந்ததால் அவை அப்புறப்படுத்தப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குப்பைத் தொட்டியில் 200-க்கும் மேற்பட்ட பால் பாக்கெட்கள் கிடந்தது குறிப்பிடத்தக்கது.