தமிழகம்

வடசென்னை - 3 அனல்மின் நிலையத்தில் அடுத்த மாதம் 800 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: வடசென்னை-3 அனல் மின்நிலைத்தில் வரும் மார்ச் மாதம் மின்னுற்பத்தி தொடங்கப்படும் எனமின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மின்நிலையத்தில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின்வாரியத்துக்கு வடசென்னை என்ற பெயரில் தலா 210 மெகாவாட் திறனில் 3 அலகுகள் உடைய அனல்மின் நிலையம் உள்ளது. இதன் அருகில் தலா 600 மெகாவாட் திறனில் இரு அலகுகள் உடைய வடசென்னை விரிவாக்க அனல்மின் நிலையம் உள்ளது.

ரூ.6,376 கோடியில் பணி: இவை தவிர, இதன் அருகில்வடசென்னை-3 என்ற பெயரில் 800 மெகாவாட் திறனில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியை கடந்த 2016-ம் ஆண்டு மின்வாரியம் தொடங்கியது. ரூ.6,376 கோடி மதிப்பிலான இப்பணியை மத்திய அரசின் பிஎச்இஎல் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

பணியை முடிப்பதில் காலதாமதம்: கடந்த 2019-20-ம் ஆண்டில் மின்னுற்பத்தியைத் தொடங்க மின்வாரியம் திட்டமிட்டது. ஆனால், ஒப்பந்ததாரர்கள் பணியை மிகவும் காலதாமதமாக செய்தனர்.

இதையடுத்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினர்.

இந்நிலையில், வரும் மார்ச் மாதம் இந்த மின்நிலையத்தில் மின்னுற்பத்தியைத் தொடங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மின்னுற்பத்தி நிலையம் மூலம் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளதால், வரும் கோடை காலத்தில் மின்தேவையை மின்வாரியம் எளிதாக சமாளிக்க முடியும்.

SCROLL FOR NEXT