ஆன்லைன் கரன்ஸி டிரேடிங் என்ற பெயரில் பல கோடி மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வேளச்சேரி கன்னிகா புரத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் இணையதளத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது 'ஆன்லைன் கரன்சி டிரேடிங்' என்ற பெயரில் ஒரு விளம்பரம் வந்துள்ளது.
அதில் முதலீடு செய்யும் பணத்தை ஒரே மாதத்தில் இரட்டிப்பாக திருப்பித் தருவதாக கூறப்பட்டிருந்தது. விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணில் கார்த்திக் தொடர்பு கொண்டு பேசினார்.
எதிர் முனையில் பேசிய இளைஞர், 'எங்களுக்கு சென்னையில் அலுவலகம் கிடையாது. கொச்சி, பெங்களூரில் கிளை அலுவலகம் உள்ளது. நீங்கள் பணத்தை முதலீடு செய்தால் ஒரே மாதத்தில் இரட்டிப்பாக திருப்பி தருகிறோம்' என்றார்.
சந்தேகம் அடைந்த கார்த்திக் இது பற்றி பரங்கிமலை துணை ஆணையர் சரவணனிடம் புகார் செய்தார். போலீசார் மோசடி கும்பலை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர். போலீஸாரின் யோசனைப்படி பணத்தை பெற்றுக்கொள்ள வருமாறு அதே செல்போன் எண்ணில் கார்த்திக் மீண்டும் பேசினார்.
மோசடி நபர்கள் பரங்கிமலை சுரங்கப்பாதை அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு பணத்தை கொண்டு வருமாறு தெரிவித்தனர். அந்த பகுதியை தனிப்படை போலீஸார் மாறு வேடத்தில் கண்காணித்தபடி இருந்தனர். போலீஸாரின் அறிவுரைப்படி பணத்துடன் கார்த்திக் சென்றார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் கார்த்திக்கிடம் இருந்த பணத்தை பெற வந்தனர். அவர்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் முத்துக்கா பட்டியை சேர்ந்த ராஜேஷ், கரூர் காளிதாஸ், கோவை பிரபு குமார், திருச்சி கணேசன் என்பது தெரிந்தது.
இவர்கள் மீது ஏற்கெனவே மோசடி, குழந்தை கடத்தல் வழக்குகள் உள்ளன. அவர்களது காரில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களும் இருந்தன.
இணைய தளத்தில் இதேபோல் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக பல விளம்பரங்களை மோசடி கும்பல் வெளியிட்டுள்ளது. இவர்கள் பல கோடி மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரிந்தது. இவர்களிடம் ஏமாந்த வர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.