கரூர்: திண்டுக்கல் மாவட்டம் பாளையம்அருகேயுள்ள காசக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் மாணிக்கம் (26). கரூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். கபடி வீரரான இவர், பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கபடிப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கணக்கப்பிள்ளையூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற மாணிக்கம், முதல் 2 சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று, 3-வது சுற்றுப் போட்டிக்காக காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை அய்யர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே மாணிக்கம் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதல்வர் நிவாரணம்: இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘கபடிப் போட்டியில் பங்கேற்று உயிரிழந்த மாணிக்கத்தின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.