விழுப்புரம் ஆட்சியர் அலுவல கத்திற்கு மனு கொடுக்க வந்த ராஜேஸ்வரி, அவரது மகன் ராகுல். 
தமிழகம்

தானாக தீப்பிடித்து எரியும் விநோத நோய் பாதித்த விழுப்புரம் சிறுவனுக்கு அரசு அறிவித்த உதவிகளை வழங்க கோரிக்கை

செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவல கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், திண்டிவனம் அருகே நெடி மோழியனூரைச் சேர்ந்த கருணாகரன் மனைவி ராஜேஸ்வரி என்பவர் தனது மகன் ராகுலுடன் (10) ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் எங்களுக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான். அவன் பிறந்த 9 நாட்களிலேயே அவனது உடலில் தானாக தீப்பிடித்து எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அப்போதைய மாவட்ட ஆட்சியர் பரிந்துரைப் படி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராகுலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு தீப்பிடித்து எரிவது குறைந்தது. பின்னர் அப்போதைய முதல்வர், எனக்கும் எனது குழந்தைக்கும் உதவித் தொகை மற்றும் தொகுப்பு வீடு, எனது கணவர் பிழைப்பு நடத்த தாட்கோ வாகன கடன் மூலம்நான்குசக்கர வாகனம் மற்றும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவதாக அறிவித்தார்.

அரசு தருவதாக கூறிய எந்தவொரு உதவியும் இதுநாள் வரையிலும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது நான் எனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறேன். ராகுல், நெடி மோழியனூரில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனுக்கு தீக்காயம் ஏற்பட்ட தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் பெரிய தழும்புகள் உள்ளன.

அவனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்படுகிறது. எனவே அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகளையும், ஒரு தொகுப்பு வீட்டையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT