தமிழகம்

நீர்வழிச் சாலை திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: வாசன்

செய்திப்பிரிவு

தமிழக அரசு நீர்வழிச் சாலை திட்டத்தை ஆரம்பித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் ஒட்டு மொத்த தமிழக மக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக விவசாயத் தொழிலுக்கும், குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. நிலத்தடி நீரின் அளவும் குறைந்து கொண்டே போகிறது. பல இடங்களில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கும் கீழே சென்றுவிட்டது. மேலும் தமிழகத்தில் வருடம் தோறும் சராசரியாக 177 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது என பொதுப்பணித்துறையின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

சென்ற ஆண்டில் வெள்ளம் ஏற்பட்ட போது மட்டும் மதுராந்தகம், பாலாறு, வைகை ஆகியவற்றிலிருந்து சுமார் 40 நாட்கள் வரை தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்று கலந்துள்ளது. அதே போல வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் கோதாவரி ஆற்றிலிருந்து மட்டும் ஆண்டு தோறும் 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இவ்வாறு வெள்ளம் ஏற்படும் போது வெளியேறும் நீரை தேக்கி வைப்பதற்கும், தேவையான பகுதிகளுக்கு தேவையான நேரம் தண்ணீர் கொடுப்பதற்கும் வடிவமைக்கப்பட்டதே தமிழ்நாடு நவீன நீர்வழிச் சாலை திட்டம்.

இத்திட்டத்தின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய். இத்திட்டத்தை ஆரம்பித்தால் சுமார் 4 வருடத்தில் முடிக்க முடியும். இத்திட்டத்தினால் கிடைக்கும் வருமானம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய். நீர்வழிச் சாலை திட்டத்தினை செயல்படுத்தும் போது நிலத்தடி நீர்மட்டம் உயரும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும், சுமார் ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் போதெல்லாம் பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அரசு செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் நீர்வழிச் சாலை போன்ற திட்டங்களுக்கு முதலீடு செய்தால் அதன் பயன் நிரந்தரமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு இத்திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தில் நதிநீர் இணைப்புத்திட்டத்தில் அதிக அளவில் தண்ணீர் சேமிக்க வாய்ப்பில்லை. ஆனால் நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும், சுமார் 75 லட்சம் ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதி பெறும், குடிநீர் பிரச்சனை தீரும், நிலத்தடி நீர் மட்டம் உயரும், வேலை வாய்ப்பு பெருகும், சுமார் 1,800 மெகா வாட் நீர் மின் உற்பத்தி செய்ய முடியும், 900 கி.மீ. நவீன நீர்வழி நெடுஞ்சாலை கிடைக்கும்.

ஏற்கெனவே தமிழக அரசு தமிழ்நாடு நீர்வழிச் சாலை திட்டம் மூலம் தமிழகத்தின் அனைத்து ஆறுகளையும் இணைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தற்போது தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத வறட்சியால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினையிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்றவும், இனி வரும் காலங்களில் தண்ணீரை முறையாக சேமித்து, பாதுகாத்து பொது மக்களுக்கு பயன்படுத்திடவும் தமிழக அரசு - தமிழ்நாடு நீர்வழிச் சாலை திட்டத்தை ஆரம்பித்து, செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

          
SCROLL FOR NEXT