வடபழனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக அரசு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திங்கள்கிழமை அதிகாலை சென்னை, வடபழனி, தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் அடுக்குமாடியின் முதல் தளத்தில் வசித்த 4 பேர் புகை மூட்டத்தில் சிக்கியதால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இவர்களையும், படுகாயமடைந்தவர்களையும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட 4 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தீவிபத்து துரதிஷ்டவசமானது, மிகவும் வேதனை அளிக்கிறது, வருத்தத்துக்குரியது.
அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் வசிப்போருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது அந்த குடியிருப்பு உரிமையாளருக்கு உள்ள கடமை. குறிப்பாக இந்த தீவிபத்துக்கு காரணம் அந்த குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள மின்சாரப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.
மேலும் மின்வாரியம் எந்த வீடாக இருந்தாலும், கடையாக இருந்தாலும் மின் இணைப்பை அவ்வப்போது தொடர் சோதனை மேற்கொண்டு மின் இணைப்பை பராமரிப்பதன் மூலம் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
அதே சமயம் குடியிருப்பு உரிமையாளர்களும் அவர்களுக்கான பாதுகாப்பினை தொடர் கண்காணிப்பின் மூலமும், தொடர் பராமரிப்பின் மூலமும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இத்தீவிபத்தினால் உயிரிழந்திருக்கின்ற 4 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இது போன்ற விபத்துக்கள் இனியும் ஏற்படாமல் இருப்பதற்கு அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். உயிரிழந்திருக்கின்ற 4 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணமாக அரசு வழங்க வேண்டும். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிறப்பு சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்கு அரசும், பொது மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.