தமிழகம்

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணக் கொள்ளையை தடுக்காவிட்டால் போராட்டம்: அன்புமணி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணக் கொள்ளையை தடுக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு இன்னும் இரு வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கண்ணுக்குத் தெரிந்து நடக்கும் இந்தக் கட்டணக் கொள்ளையை தடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் எந்த வரையரைக்கும் உட்படாமல், எந்த விதிகளையும் மதிக்காமல் சட்ட விரோதமாக செயல்படும் அமைப்புகள் என்றால் அவை தனியார் கல்வி நிறுவனங்கள் தான். தமிழகத்தைப் பொறுத்தவரை ஜூன் மாதத்தில் கல்வியாண்டு தொடங்கும் மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் ஆகிய பாடத் திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏப்ரல்- மற்றும் மே மாதங்களில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் மார்ச் மாதத்திற்குப் பிறகு தான் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மெட்ரிக் பள்ளிகளில் ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு முன்பாகவும், சிபிஎஸ்இ பள்ளிகளில் மார்ச் மாதத்திற்கு முன்பாகவும் விண்ணப்பங்கள் கூட விநியோகிக்கப்படக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆனால், தமிழகத்திலுள்ள 80 விழுக்காடு பள்ளிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதத்திற்குள் மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. பல பள்ளிகளில் மழலையர் வகுப்புக்கே ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கல்விக் கட்டணமாக வசூலிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே ரசீது வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கட்டணக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை மட்டுமே கல்விக் கட்டணமாக தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட மூன்று முதல் நான்கு மடங்கு வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் கடுமையான மன உளைச்சலும், பொருளாதார இழப்பும் அடைந்தாலும் கூட, தங்கள் குழந்தைகளின்கல்வியை கருத்தில் கொண்டு இது பற்றி வெளிப்படையாக புகார் அளிக்க முன்வருவதில்லை. இதுவே கட்டணக் கொள்ளையருக்கு சாதகமாக போய்விட்டது.

புதிய மாணவர் சேர்க்கைக்கான கட்டணக் கொள்ளை கடந்த மார்ச் மாதமே கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், அடுத்தகட்டமாக பழைய மாணவர்களிடம் கல்விக் கட்டணக் கொள்ளை தொடங்கி உள்ளது. தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான அரசு குழுவின் தலைவராக இருந்த நீதிபதி சிங்காரவேலு கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவருக்கு பதிலாக புதிய தலைவர் நீண்டகாலமாக நியமிக்கப்படவில்லை.

நீதிபதி சிங்கார வேலு ஓய்வு பெற்று 15 மாதங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் 22-ம் தேதி தான் கட்டண நிர்ணயக் குழுவின் புதிய தலைவராக நீதிபதி டி.வி. மாசிலாமணி நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் கட்டண நிர்ணயக் குழு இதுவரையில் ஒருமுறை கூட கூடவில்லை என்பதால், மூன்றில் இரு பங்கு தனியார் பள்ளிகளுக்கு புதியக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான அடிப்படை பணிகள் கூட இன்று வரை தொடங்கப்படவில்லை.

இத்தகைய சூழலில் ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் கடைசியாக எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததோ, அந்தக் கட்டணத்தை மட்டும் தான் மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகள் வசூலிக்க வேண்டும். ஆனால், தனியார் பள்ளிகளோ அதிகாரபூர்வமாக கட்டணம் நிர்ணயிக்கப்படாததைக் காரணம் காட்டி விருப்பம் போல கல்விக்கட்டணத்தை வசூலிக்கின்றன.

தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு பள்ளிகளுக்கு ஏற்கெனவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், அப்பள்ளிகளும் பலமடங்கு கட்டணத்தை வசூலிக்கின்றன. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, ஆட்சியாளர்களின் முழு ஆதரவும் தங்களுக்கு இருப்பதால் எந்தப் பள்ளி மீதும் அரசு நடவடிக்கை எடுக்காது என பள்ளி நிர்வாகிகள் சவால் விடுகின்றனர்.

தமிழகத்தில் அனைவருக்கும் தரமான கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கி தமிழகத்தை முன்னேற்ற முடியும். இதை மனதில் கொண்டு தான் பாமக ஆட்சிக்கு வந்தால் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால், தமிழக ஆட்சியாளர்களோ ஆடு, மாடுகளை இலவசமாகக் கொடுத்து கல்வியை கடை சரக்காக்கி கொள்ளை விலைக்கு விற்பனை செய்ய அனுமதித்துள்ளனர். இது கல்விச் சீரழிவுக்கே வழிவகுக்கும்.

தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், செயலாளரும் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகின்றனர். அவை வரவேற்கத்தக்கவை என்றாலும், அவற்றை விட கல்விக் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டியதுதான் தலையாய பணியாகும். அதற்காக ஒவ்வொரு வட்டத்திலும் கல்வியாளர்கள், பெற்றோர்கள் அடங்கிய குழுவை அமைத்து கண்காணிப்பதன் மூலம் கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்பட்ட கட்டணம் குறித்து பொதுத்தணிக்கை நடத்தி தவறு செய்ய பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை செய்யத் தவறினால் எனது தலைமையில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்'' என அன்புமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT