ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தேன்கனிக் கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதிமுகவைப் பொறுத்தவரை இரட்டை இலை சின்னம் தான் அவர்களுக்குள் ஆதரவு. ஆனால், அக்கட்சி எதிர்க்கட்சியாக கூட களத்தில் இல்லை. பாஜகவினர் சாதி மற்றும் மதத்தைத் தூண்டுவதும், தேசியத் தலைவர்களை அவமதிப்பதும், திருவள்ளுவர் போன்ற இலக்கிய ஆளுமைகளை மதம் எனும் பெயரில் அடையாளப்படுத்த முயல்வதும் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. இந்துக்களுக்கு நாங்களே பாதுகாப்பு என்கிற மாயையை உருவாக்கி அரசியல் செய்து வருகிறார்கள். பொது மேடைகளில் நான்காம் தரப் பேச்சாளர்கள் போல் பேசி வருகிறார்கள்.
தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்டுப்பாட்டுக்குச் சென்று விட்டது. தமிழகத்தில் அதிமுகவை நான்காக உடைத்த பாஜக, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டிப் படைக்கிறது.
மத்திய பிரதேசத்தில் சிவசேனாவை உடைத்த ஷிண்டேவுக்கு வில்அம்பு சின்னம், கட்சி உரிமையை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. இது ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.