ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்களை அடைத்து வைத்த திமுக மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தெரிவித்தார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், சுவாமி தரிசனம்செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் நலன் காக்கும் அரசாக அதிமுக அரசு இருந்தது. ஈரோட்டுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் அதிமுகஆட்சியில் பழனிசாமி செய்துள்ளார்.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேறும் வகையில் செயல்படுத்தியதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
அடிப்படை பிரச்சினையில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தினசரி 5 கொலை, கொள்ளைகள் அரங்கேறி வருகிறது. சட்டம் ஒழுங்கு ஏற்படும் பல பிரச்சினைகளைத் தமிழக அரசு மூடி மறைத்து வருகிறது. கடந்த 2 ஆண்டு ஆட்சியில் எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஈரோடு இடைத்தேர்தலில் மக்களை அதிமுகவினர் சந்திக்காத வகையில், அவர்களை திமுகவினர் அடைத்து வைத்துள்ளனர். எந்த தேர்தலிலும் இல்லாத புதுமையை திமுகவினர் புகுத்தி வருகின்றனர். இதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
மக்களை அடைத்து வைத்தது குறித்து திமுக மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியலில் சகஜம்
இதேபோல, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உள்ளிட்டவை பல மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, ஈரோடு இடைத்தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகத் தான் மக்கள் உள்ளனர்.
கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட ஆடியோவில், மாவட்டச் செயலாளர் சீட்டு வாங்கித் தருவதாக ஒரு இடத்தில் கூட கே.பி.முனுசாமி கூறவில்லை. ஆடியோ உண்மையாக இருக்கலாம். அதில் இருக்கும் கருத்து உண்மை இல்லை.
அரசியலில் கொடுக்கல், வாங்கல் சகஜம். இதையெல்லாம் ஆடியோவாக வெளியிடுவது அரசியல் நாகரிகம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.