திமுக முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த க.அன்பழகனின் சகோதரர் க.மணிவண்ணன்(81), உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம், க.அன்பழகனின் மகன் அ.அன்புச்செல்வன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, உறவினர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலையில் மணிவண்ணனின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "பேராசிரியர் அன்பழகனின் இளைய சகோதரர் க.மணிவண்ணன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் என்பதையறிந்து மிகவும் வேதனையடைந்தேன். பேராசிரியரைப் போலவே, என் மீது மிகுந்த அன்புகொண்டு பழகக் கூடியவர் மணிவண்ணன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.