சென்னை மாநகரில் மழைநீர் வடிகால் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்டவற்றால் சேதமடைந்த 1,860 கி.மீ. நீள சாலைகளை ரூ.1,171 கோடியில் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாவட்டம் 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 22 லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்த மக்கள்தொகை சுமார் 85 லட்சமாக உள்ளது. மற்ற பகுதிகளில் இருந்து தினமும் 15 லட்சம் பேர் சென்னைக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு சராசரியாக ஒரு சதுர கி.மீ. பரப்பில் 26 ஆயிரம் பேரும், வட சென்னை போன்ற பகுதிகளில் சில இடங்களில் 65 ஆயிரம் பேரும் வசிக்கின்றனர். மாநகராட்சி சார்பில் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அதன்பிறகு 2021-ம் ஆண்டும் அடுத்தடுத்து பெய்த மழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், அதிக அளவில் மழைநீர் வடிகால்களை கட்டும் பணியில் மாநகராட்சி இறங்கியது. அதன்படி, கடந்த ஆண்டு சுமார் ரூ.558 கோடியில் 180 கி.மீ. நீளத்துக்குமேல் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
மேலும், கொசஸ்தலை ஆறுவடிநிலப் பகுதி மற்றும் கோவளம்வடிநிலப் பகுதிகளிலும் மழைநீர்வடிகால்கள் புதிதாக அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுமட்டுமல்லாது சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் குழாய் பதிப்பு மற்றும்பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் சாலைகள் சேதமடைந்தன.
இது தொடர்பாக சென்னைமாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி மேற்கொண்டஆய்வின்படி, 1,860 கி.மீ. நீளசாலைகளை சீரமைக்க வேண்டியுள்ளது. அதற்கு ரூ.1,171 கோடியில், பல்வேறு நிதி ஆதாரங்களின்கீழ் திட்ட மதிப்பீடு தயாரித்துஅரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் ரூ.65 கோடியில் 122 கி.மீ. நீளத்துக்கு 670 தார் சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதர சாலைகளை சீரமைக்கும் பணிகளும் படிப்படியாக நடைபெறும்.
இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.