காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் அறிவித்தபோது, வேளாண் பொறியியல் துறையினரின் அறுவடை இயந்திரங்களுக்கு 50 சதவீதம் வாடகை மானியம் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டும், இதுவரை அரசாணை வெளியிடப்படாததால் முழு வாடகையே வசூலிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிப்ரவரி முதல் வாரம் பெய்த தொடர் மழையால், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரங்களுக்கு 50 சதவீத வாடகை மானியம் அளிக்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
ஆனால், நெல் அறுவடை இயந்திரங்களுக்கு 50 சதவீத வாடகை மானியம் வழங்க இதுவரை அரசாணை வெளியிடப்படாததால், முழு வாடகை, அதாவது டயர் பொருத்திய அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.1,260, செயின் பொருத்திய இயந்திரத்துக்கு ரூ.1,880 வசூலிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறைக்கு 9 அறுவடை இயந்திரங்கள் மட்டுமே உள்ள நிலையில், முழுமையான வாடகை செலுத்தினாலும், அறுவடை இயந்திரங்கள் குறித்த காலத்தில் வருவதில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கூறியதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, நெல் அறுவடை இயந்திரங்களுக்கு 50 சதவீத வாடகை மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், வேளாண் பொறியியல் துறையினரிடம் போதிய அறுவடை இயந்திரங்கள் இல்லாததால், தனியார் அறுவடை இயந்திரங்களுக்கும் 50 சதவீத வாடகை மானியம் வழங்க வேண்டும். முழு வாடகை வசூலிக்கப்பட்ட விவசாயிகளிடம், 50 சதவீத வாடகை மானியத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழக முதல்வரின் அறிவிப்புக்குப் பின், வேளாண் பொறியியல் துறை சார்பில் வெளி மாவட்டங்களில் இருந்து திருவாரூருக்கு மேலும் 5 அறுவடை இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றையும் சேர்த்து தற்போது 9 இயந்திரங்கள் உள்ளன. ஆனால், இது போதுமானதல்ல.
அறுவடை இயந்திரங்களுக்கு 50 சதவீத வாடகை மானியம் என்ற முதல்வரின் அறிவிப்பு இன்னும் அரசாணையாக வெளிவராத நிலையில், விவசாயிகளிடம் முழு வாடகையே வசூலிக்கப்பட்டு வருகிறது.
அரசாணை வெளியான பிறகு விவசாயிகளிடம் வசூலிக்கப்பட்ட வாடகையில் 50 சதவீதம் திருப்பித் தரப்படும் என்றனர்.