கோவை: உலகளவில் அதிகரித்து வரும் மன நோயில் இருந்து விடுபட, போதைப் பழக்கம் உள்ளிட்ட தீய வழிகளை மக்கள் நாடி செல்வதை தடுக்கும் நோக்கில் இரண்டாண்டுகளில் 200 கோடி பேருக்கு எளிய முறையில் யோகா கற்றுத்தர முடிவு செய்துள்ளோம் என ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.
கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் நேற்று மாலை நடந்த மகா சிவராத்திரி விழாவில் சத்குரு பேசியதாவது: குடியரசுத் தலைவர் நம்முடன் இருப்பது பெருமிதம். மனித குல மேம்பாட்டுக்காக 112 வகையான தொழில்நுட்பங்களை வழங்கினார் ஆதியோகி. மூன்று வழிகளில் அவற்றை போதித்தார். முதலாவதாக தன்னிடம் கற்ற ஏழு சப்தரிஷிகளுக்கு (முனிவர்களுக்கு) போதித்தார்.
விவரிக்க முடியாத அனுபவங்களை கண்ட பார்வதிதேவி யோக அறிவியல் மூலம் மனித அகநிலையின் தன்மையையும், மனித படைப்பின் தன்மையையும் ஆராய்தல்குறித்து மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். சிவனிடம் சென்று தனக்கும் கற்றுக்கொடுக்க கேட்டுக்கொண்டார். அதற்கு சிவன் தனது மடியில் அமர்ந்து கொள் என கூற, அவரின் ஒரு பாதியாக பார்வதி தேவியை மாற்றினார்.
இதுவே அர்த்தநாரி என்று போற்றப்படுகிறது. ஆண் பெண் கலப்பு மூலம் நாம் அவதரித்தோம் என்பதை அர்த்தநாரி உணர்த்துகிறது. மூன்றாவது வகையை சேர்ந்த மக்கள் தன்னிடம் கற்கவோ மடியில் அமர்ந்து கொள்ளவோ வேண்டாம் என்று கூறிய ஆதியோகி, தன்னை அப்படியே பருகிக்கொள்ளுங்கள் என்றார். அவர் கூறியபடி பின்பற்றிய மக்கள் பரவசத்தை அடைந்தனர்.
மகா சிவராத்திரி என்ற இந்நாளில் உலகம் குறித்தும் தங்களை குறித்தும் மக்கள் எந்த அளவு தெரிந்து வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பாகும். பல வித மக்களாக இருந்தாலும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரு நாடாக இருந்துள்ளோம். நம்மை பாரதம் என்று தான் அழைத்தனர். இதற்கு காரணம் நம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மையையும், தீர்வுகளையும் தேடுபவர்கள்.
வெறும் ஆறுதலை தேடும் விசுவாசிகள் அல்ல. ‘ஓம் நமச்சிவாய’ மந்திரத்தின் பங்ஜாட்சரங்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன. இது சப்தங்களின் அற்புதமான வடிவியலாகும். ஒருவர் இதை பயன்படுத்த கற்றுக்கொண்டால் வாழ்வில் முன்னேற் றத்துக்கும், பேரின்பத்துக்கும் வழி வகுக்கும். வாழ்க்கையை சுமை இல்லாமல் செய்யும்.
இன்று உலகளவில், உலக சுகாதார நிறுவனம் உள்பட மனநோய் குறித்து பேசி வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் போதைப்பழக்கம் உள்ளிட்ட தீய பழக்கங்களை தேடி செல்கின்றனர். இதை தடுக்கும் நோக்கில் ஈஷா சார்பில் அடுத்த 24 மாதங்களில் 2 பில்லியன் (200 கோடி) மக்களுக்கு எளிய முறையில் யோகா கற்றுத்தர அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
இரவு முழுவதும் நடந்த சத்சங்கம்: கோவை ஈஷாவில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெற்றன. நள்ளிரவு மற்றும் அதிகாலை பிரம்ம முகூர்த்த காலத்தில் சத்குரு வழிநடத்தும் சக்தி வாய்ந்த தியான நிகழ்வுகளும், சத்சங்கமும் நடைபெற்றன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புற கலைஞர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப் புற கலைஞர் மாமே கான், இசையமைப்பாளரும், பிரபல சித்தார் இசை கலைஞருமான நிலத்ரி குமார், டோலிவுட் பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் பங்கேற்று இரவு முழுவதும் பாடல்களை பாடி இசை நிகழ்ச்சி நடத்தினர்.
ஈஷா மகா சிவராத்திரி விழா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதுதவிர, மதுரை, திருச்சி, சென்னை, வேலூர், நாகர்கோவில் உட்பட தமிழ்நாட்டில் 32 இடங்களில் ஈஷா சார்பில் மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெற்றன.