தமிழகம்

4 புதிய வடிவமைப்பில் ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிப்பு - ஐசிஎஃப் அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: வந்தே பாரத்’ ரயிலின் முதல் சேவை தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 4 புதிய வடிவமைப்பில் ‘வந்தே பாரத்’ ரயில்களை அடுத்தடுத்து தயாரிக்க ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்-ல் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘ரயில் 18’ என்ற அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. அதிவேகத்தில் செல்லும் இந்த ரயிலுக்கு ‘வந்தே பாரத் ரயில்’ என்று பெயரிடப்பட்டது.

‘வந்தே பாரத்’ ரயில் சேவையை, புதுடெல்லி - வாரணாசி இடையே 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதுவரை 10 ‘வந்தே பாரத்’ரயில்கள் தயாரிக்கப்பட்டு, நாடுமுழுவதும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தொடங்கி 4 ஆண்டுகள் அண்மையில் நிறைவடைந்தது. இதையொட்டி ‘வந்தே பாரத்’ ரயில்களை 4 புது வகையான வடிவமைப்புடன் தயாரிக்க ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: ‘வந்தே பாரத்’ ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நாடுமுழுவதும் முக்கியமான வழித்தடங்களில் 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

தூங்கும் வசதி கொண்ட ரயில்,பார்சல் ரயில், மெட்ரோ மற்றும்புறநகர் மின்சார வந்தே பாரத் ரயில் என 4 புது வடிவமைப்புகளில் படிப்படியாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT