பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 602 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை எழிலுடன் விரிந்து கிடக்கிறது. இங்கு 46 இனங்களைச் சேர்ந்த 404 பாலூட்டிகள், 74 இனங்களைச் சேர்ந்த 762 பறவைகள், 32 இனங்களைச் சேர்ந்த 313 ஊர்வன என மொத்தம் 152 இனங்களைச் சேர்ந்த 1,479 விலங்குகள் உள்ளன. இவற்றை பார்வையிட குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய வார்தா புயல் காரணமாக, பூங்காவில் இருந்த 12 ஆயிரம் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. பூங்கா சீரமைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது.
வழக்கமாக பூங்காவுக்கு தினமும் குறைந்த பட்சம் 5 ஆயிரம் பேர் வருகை தருவார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் தற்போது பார்வையாளர் அதிகமாக வரத் தொடங்கியுள் ளனர். நேற்று மட்டும் 16,500 பேர் வருகை வந்துள்ளனர். மே 1-ம் தேதி சுமார் 19 ஆயிரம் பேர் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.