தமிழகம்

இலங்கைக்கு கடத்த முயற்சி: சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி போதை பொருள் சிக்கியது

செய்திப்பிரிவு

சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு நேற்று அதிகாலை 1.30 மணிக்கு ஒரு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் இரண்டாவது முறையாக சோதனை செய்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த வசூல்தீன்(32), சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்த மொய்தீன் அபுபக்கர்(38) ஆகியோர் வைத்திருந்த கைப்பையில் 4 கருப்பு நிற பார்சல்கள் இருந்தன. அதைப் பிரித்து பார்த்தபோது ‘பிரவுன் சுகர்’ என்ற போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித் தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடி.

வசூல்தீன், அபுபக்கர் இருவரையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு பலமுறை சென்று வந்திருப்பது தெரிந்தது.

அத்தனை பயணங்களிலும் அவர்கள் போதைப் பொருள் கடத்தியிருப்பது விசாரணையில் தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT