சென்னை: ஹோல்டு மெடிக்கல் அகாடமிஆஃப் இந்தியா சார்பில் 'கார்டியோபேஸ் 2023' நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இதய சிகிச்சை மையத் தலைவரும், மூத்த மருத்துவருமான எஸ்.தணிகாசலத்துக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: மருத்துவர் தணிகாசலத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுப்பது, என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளத்தில் பதிந்திருக்கும். நான் பல நேரங்களில் மருத்துவர் தணிகாசலத்தை எனது `காட்பாதர்' என்று கூறியுள்ளேன். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், தணிகாசலத்துக்கும் இருந்த நட்பு சாதாரணமானதல்ல.
மருத்துவ ரீதியாக ஏதாவது விவாதிக்க வேண்டும் என்றால், உடனே தணிகாசலத்தைக் கூப்பிடுங்கள் என்றுதான் கருணாநிதி சொல்வார். அந்த அளவுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் நமது பேராசிரியர் தணிகாசலம். நான் சுறுசுறுப்புடன் சுற்றிவந்து,மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் கூறுகின்றனர்.
நான் பல்வேறு இடங்களுக்கும் சென்று, சுறுசுறுப்பாகப் பணியாற்றுவதற்கு, மருத்துவத் துறையினரின் அறிவுரைதான் காரணம். இவ்வாறு முதல்வர் பேசினார். நிகழ்ச்சியில், அகாடமி இயக்குநர்கள் செங்கோட்டு வேலு, முருகானந்தன், சென்னியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.