சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநில செயலாளர் (பொறுப்பு) பி.எஸ்.மாசிலாமணி நேற்று விடுத்த அறிக்கை: புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் கடந்த 26-ம் தேதிடிராக்டர் பேரணி நடைபெற்றது. இதையொட்டி தமிழகத்திலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெற்றிகரமாக டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேரணி கூடாது என தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால், வேறு வழியின்றி விதிகளை மீறி அங்கு டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. இதனால் அங்கு விவசாயிகள், டிராக்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. காவல்துறையால் போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்றிட வேண்டும் என்றார்.