கமல் தைரியமான நபர், பிரச்சினைகள் வந்தால் ரஜினி பேசுவார் என்று அன்புமணி கூறியுள்ளார்.
மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள பாமக மாநில துணைத் தலைவரை அன்புமணி இன்று சந்தித்துப் பேசினார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது:
''கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகம் நடிகர்கள் கையில் இருந்தது. மக்கள் குறிப்பாக இளைஞர்கள் சினிமா துறையைச் சார்ந்தவர்கள் ஆண்டது போதும் என நினைக்கிறார்கள். சினிமா துறையைச் சார்ந்தவர்களுக்கு ஆட்சி செய்வதற்கான நிர்வாகத் திறமை இல்லை. அவர்கள் ஆட்சி செய்வதையே சினிமா மாதிரி நினைக்கிறார்கள். மக்களின் கஷ்டங்கள் அவர்களுக்குத் தெரியாது, புரியாது.
திறமையானவர்கள் வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இனி சினிமா துறையைச் சார்ந்தவர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் மக்களிடம் எடுபடப் போவதில்லை.
நடிகர் கமல்ஹாசனை எந்தக் குறையும் சொல்ல முடியாது. தொடர்ந்து தனது கருத்துகளை வெளிப்படையாகக் கூறி வரும் தைரியமான நபர். அவர் தைரியமாக கருத்து சொன்னதின் விளைவுதான் விஸ்வரூபம் படத்தை வெளியிட முடியாத அளவுக்கு பாதிப்பு வந்தது. அந்த நிலையிலும் கமல்ஹாசன் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.
நிறைய பிரச்சினைகள் என்றால் ரஜினி அவ்வப்போதுபேசுவார். அவ்வளவுதான். அரசியலுக்கு வருவது பற்றி உறுதியான கருத்தை ரஜினி சொல்ல வேண்டும். முடிவு செய்து ரஜினி அரசியலுக்கு வருகிறாரா, இல்லையா என்பதை தெளிவாகச் சொல்ல வேண்டும். புலி வருது புலி வருது என்று சொல்வதில் அர்த்தமில்லை'' என்றார் அன்புமணி.
ஒரே நேரத்தில் ரஜினி மற்றும் கமலின் அரசியல் நிலைப்பாட்டை அன்புமணி விமர்சித்துள்ளது கவனிக்கத்தக்கது.