தமிழகம்

ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ கொடுக்கும்போது ஒப்புகை பெற வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’பை நேரில் வழங்குவதோடு, அதற்குரிய ஒப்புகையையும் பெற வேண்டும், என வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி அறிவுறுத்தியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கவுள்ளது. வாக்காளர்களுக்கு இன்று (19-ம் தேதி) முதல் ‘பூத் சிலிப்’ வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக ஈரோட்டில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி பேசியதாவது: வாக்காளர் தகவல் சீட்டில், வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெறாது. இதில் வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பெயர் இடம் பெற்றுள்ள பாகத்தின் பெயர், பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடியின் பெயர், தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவு நேரம் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

இந்த வாக்காளர் தகவல் சீட்டை (பூத் சிலிப்) மட்டும் வைத்து வாக்குச்சாவடியில் வாக்களிக்க இயலாது. எனவே, வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நேர்வில் இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தைக் கொண்டு வந்து வாக்களிக்கலாம் என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வீடு வீடாகச் சென்று, பூத் சிலிப்பை, அந்தக் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில், 18 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களிடம், வாக்காளர்களிடம் அளித்து அதற்குரிய ஒப்புகையை பெறவேண்டும். வாக்காளர் தகவல் சீட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். மேலும் எந்த ஒரு நபரும் வழங்கக்கூடாது, என்றார். கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT