மதுரை வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கக் கோரி போராட்டக்குழுவினர் மனு அளிக்க உள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் தற்போது அந்த திட்டமே தமிழகத்தை விட்டு கைவிட்டு போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஆர்வமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த மருத்துவமனையை தஞ்சாவூருக்கு கொண்டு செல்ல ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், தென்மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்துள் ளனர்.
அதேசமயம், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனையை அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஆர்வ மாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே மதுரையில் இத்திட்டத்தை கொண்டுவரக்கோரி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகளும், மதுரை மடீட்சியா அமைப்பினரும் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டனர். அப்போது, முதல்வரை சந்தித்து வலியுறுத்துமாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகிறார். அவரை, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கான மக்கள் இயக்கம்’ ஒருங்கிணைப்பாளர் வி.எஸ். மணிமாறன் கூறியது: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இது தொடர்பாக இன்று முதல்வரை சந்தித்து, மதுரையில் இத்திட்டத்தை கொண்டுவருவதற்கான சாதக அம்சங்களை குறிப்பிட்டு மனு அளிக்க உள்ளோம்.
இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால், தென் மாவட்டங்களில் தொழில், வேலைவாய்ப்புகள் பெருகும். மதுரையில் மருத்துவ சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா மேம்படும் என முதல்வரிடம் தெரிவிக்க உள் ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.