தமிழகம்

மது இல்லா நகராக மாறியது மயிலாடுதுறை: தனியார் விடுதி பாரும் மூடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் மயிலாடுதுறை நகரில் இருந்த ஒரே ஒரு மதுபான கூடமும் (பார்) தற்போது மூடப்பட்டு விட்டதால் மது இல்லா நகரமாக மாறியிருக்கிறது மயிலாடுதுறை.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மொத்தம் 16 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கிவந்தன. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அனைத்து கடைகளும் மூடப்பட்டுவிட்ட நிலையில், நாராயணபிள்ளைத் தெருவில் தனியார் விடுதியில் இருந்த பார் மட்டும் மூடப்படவில்லை. மாநில நெடுஞ்சாலையில் இருந்து 75 மீட்டர் தொலைவில் இருந்தபோதும் அது தொடர்ந்து இயங்கி வந்தது.

மயிலாடுதுறை நகருக்குள் வேறு மதுக்கடை இல்லாததால் மதுப்பிரியர்கள் அந்த விடுதியில் அதிக விலை கொடுத்து மதுபானங்களை வாங்கி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த பார் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் அந்த பார் மாநில நெடுஞ்சாலையில் இருந்து 250 மீட்டர் தூரத்துக்குள் இருப்பது தெரியவந்ததால், உடனடியாக பாரை மூடுவதற்கு ஆட்சியர் பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பார் மூடப்பட்டது.

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் 30-க்கும் அதிகமான நவக்கிரக தலங்கள், வைணவ ஆலயங்கள் உள்ள நிலையில், அவற்றை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மது இல்லா நகரமாக மயிலாடுதுறை மாறியிருப்பதற்கு மக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT