தமிழகம்

சட்டப்பேரவையில் ஜெ. படத்தை வைப்பது சட்டவிரோதம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து

செய்திப்பிரிவு

நீதிமன்றத்தில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் வைப் பது சட்டவிரோதமானது என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன் னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிமன்றத்தில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் வைப் பது சட்டவிரோதமானது. நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்று சொன்னால், தலைமை காவல் அதிகாரி அலுவலகத்தில் வீரப்பன், ஆட்டோ சங்கர் படத்தை வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

எம்.ஜி.ஆர். நினைவிடம் இருக் கும் இடத்தில் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. அதுவே மிகப்பெரிய தவறு. அரசு பணத்தில் அங்கு மணிமண்ட பம் கட்டப்போவதாக அறிவித்திருக் கின்றனர். ஒரு குற்றவாளிக்கு அரசு செலவில் மணிமண்டபம் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்?

லஞ்சப் புகாரில் சிக்கிய அமைச்சர் சரோஜாவை கைது செய்ய வேண்டும். அவரை அமைச் சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதேபோல், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் அவரைக் கைது செய்ய வேண்டும்.

முதல்வர் பழனிசாமி, ஓ.பி.எஸ். என இருவரும் பிரதமரை சந்தித்த தற்கான காரணம் தெரியவில்லை. இருவரையும் பிரதமர் மாறி, மாறி சந்தித்ததைப் பார்த்தால், ஸ்டாலின் சொல்வதைப்போல் கட்டப்பஞ்சாயத்து செய்வது உண்மைதான் என்று சொல்ல வேண்டியுள்ளது.

தனியார் பாலில் ரசாயனம் கலந்துள்ளது, புற்றுநோய் வரு கிறது என அமைச்சர் அறிக்கை விடுவதற்கு பதிலாக, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக மிரட்டுகிறார் என்ற சந்தேகம் வருகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும். அப்படி டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்றால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், காவல் நிலையங்களிலேயே டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும். அப்போது கடைக்காவது பாது காப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT