எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் 
தமிழகம்

கும்பகோணம் | லஞ்சம் வாங்குவதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் எதிர்ப்பு

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (பிப்.16) நடைபெற்றது. கோட்டாட்சியர் எஸ்,பூர்ணிமா தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் பி.வெங்கடேஸ்வரன், பூங்கொடி, சுசிலா, நேரடி நெல் கொள்முதல் நிலைய துணை மேலாளர் டி.இளங்கோவன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்குவதை கண்டித்து கருப்பு பேட்ஜ்அணிந்து விவசாயிகள் பங்கேற்றனர். முன்னதாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் ஈரமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், அங்கு லஞ்சம் வாங்குவதை தவிர்க்க வேண்டும், பயிருக்கான முழுக்காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும், மத்திய குழு பார்வையிடுவது தேவையற்றதாகும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டாட்சியர் மேஜை அருகில் சென்று கண்டன முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர் பின்னர், அலுவலக வாயிலில் கண்டன முழக்கமிட்டனர்.

கோட்டாட்சியர் எஸ்,பூர்ணிமா பேசும்போது, “இக்கூட்டத்திற்கு வராமல் உள்ள அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த கூட்டத்தில் 34 மனுக்கள் பெறப்பட்டு 20 மனுக்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள், ”அண்மையில் மத்திய குழு பார்வையிட்டு சென்ற பல நாட்களான நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. புத்தூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு விதிமுறைகளை மீறி மணல் எடுத்துச் செல்வதை கட்டுப்படுத்த வேண்டும், கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை பணிக்கு கூடுதலாக ஆட்கள் நியமனம் செய்து, நவீன இயந்திரங்களை கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், நீரத்தநல்லூர் முத்துகருப்பன் வாய்க்காலை தூர்வாரி 45 ஆண்டுகளுக்கு மேலாகுகிறது. 15 அடி அகலத்திலிருந்த வாய்க்கால் தற்போது 3 அடியாகி விட்டது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஆனால் அதிகாரி, தவறான பதில்களை கூறுவதை விட்டு, வாய்க்காலை தூர்வாரவேண்டும், அரசியல் செய்வதற்காகவும், கண்துடைப்பிற்காக தான் மத்திய குழு ஆய்வுக்கு வருகிறது. இது தேவையில்லாததாகும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்குபவர்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், நீர்வள ஆதாரத்துறையின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்து அட்டவணையை அமைக்க வேண்டும், பழவத்தான்கட்டளை வாய்க்காலில் நடைபெறும் சீரமைப்பு பணிகளுக்காக பல்வேறு மரங்களை அகற்றியும், சேதப்படுத்தியுள்ளதற்கு இழப்பீடு வழங்க வேண்டும், வாழ்க்கை-தூத்தூர் இடையே உயர்மட்டப் பாலத்துடன் கூடிய கதவணையை அமைக்க வேண்டும். கணபதி அகரஹாரத்திலுள்ள அரசு புறம்போக்கில் கால்நடை மருத்துவமனை கட்ட வேண்டும், மருத்துவக்குடி, திருவைகாவூரிலுள்ள அரசு புறம்போக்கு இடங்களில் வீடில்லா ஏழை, விதவை, மாற்றுத்திறனாளிகள், விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகள், கூலி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், குளங்களுக்கு செல்லும் நீர் வரும் பாதை, வெளியேறும் பாதைகளை கண்டெடுத்து, தண்ணீர் வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.” என விவசாயிகள் தெரிவித்தனர்.

அப்போது பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி, தனது நிலத்தை அளவீடு செய்ய, நில அளவையருக்கு கடந்த 2021-ம் ஆண்டு மனு அளித்தும் இதுவரை வரவில்லை எனக் கூறியதால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, நிலஅளவையரை அங்கு சென்று நிலத்தை அளவீடு செய்ய வட்டாட்சியர் உத்தரவிட்டார். கடந்த 2 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட கோட்டாட்சியருக்கு நன்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT