தமிழகம்

மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த விவகாரம்: ஆசிரியர் கைது

ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக மாணவிகளை அழைத்து வந்த ஆசிரியர் ஜெபசேகயு எப்ராகிம் மீது மாயனூர் போஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 15 மாணவிகளை அப்பள்ளி ஆசிரியர்கள் ஜெபசகேயு எப்ராகிம், திலகவதி ஆகியோர் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே தோளூர்பட்டியில் உள்ள தனியார் (கொங்குநாடு) பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நேற்று நடந்த மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைத்து வந்திருந்தனர்.

போட்டியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்புவதற்கு முன்னதாக, கரூர் மாவட்டம் மாயனூர் வந்த அவர்கள் காவிரி ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி தமிழரசி, இனியா, லாவண்யா, சோபியா ஆகிய 4 மாணவிகள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாயனூர் போலீஸார், முசிறி மற்றும் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை வீரர்கள் மாணவி சடலங்களை மீட்டனர். கரூர் ஆட்சியர் த.பிரபுசங்கர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆசிரியர்கள், மாணவிகளை சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பிலிப்பட்டி பள்ளி முன் திரண்டு கதறி அழுது, ஆசிரியர்கள் கவன குறைவாக நடந்து கொண்டதால்தான் மாணவிகள் உயிரிழந்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, டிஎஸ்பி காயத்ரி, முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன் ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர். கவனக்குறைவாக நடந்து கொண்டதாகக்கூறி தலைமை ஆசிரியர் பொட்டுமணி, ஆசிரியர்கள் ஜெபசகேயு எப்ராகிம், திலவகதி ஆகிய 3 பேரை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சாமி முத்தழகன் பணியிடை நீக்கம் செய்தார்.

மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த மாணவிகள் தமிழரசி, சோபியா ஆகியோரின் தாயார்கள் மற்றும் ஒரு உறவினர் சடலங்களை பார்த்து மயக்கமடைந்தனர். மேலும் தாங்கள் வருவதற்கு முன்பே பிரேத பரிசோதனை பரிசோதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடல்களை வாங்க மறுத்து வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமதிக்காமல் உடல்களை வழங்குவதற்காகவே உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகக்கூறி குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து 3 மணி நேர போராட்டங்களுக்கு பிறகு சடலங்களை பெற்றுக்கொண்டு புறப்பட்டனர். இலுப்பூரிலும் 2 மணி நேர மறியல் நடைபெற்றது. இச்சம்பவம் குறித்து ஆசிரியர் ஜெபசகேயுஎப்ராகிம் (50) மீது வழக்கு பதிவு செய்த மாயனூர் போலீஸார் அவரை கிருஷ்ணராயபுரம் மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தி குளித்தலை கிளை சிறையில் நேற்று அடைத்தனர்.

பிலிப்பட்டியில் அமைச்சர் ரகுபதி மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்த ஆறுதல் கூறி முதல்வர் அறிவித்த ரூ.2 லட்சம் நிவாரண நிதியை வழங்கினர். கரூர் எம்.பி. செ.ஜோதிமணி மாணவிகளின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில் மாணவிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து மாணவிகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT