ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பம்பாளையம் பகுதியில், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். 
தமிழகம்

அதிமுக ஆட்சியில் மக்கள் ஏற்றம்; திமுக ஆட்சியில் ஏமாற்றம்: ஈரோட்டில் பழனிசாமி பிரச்சாரம்

செய்திப்பிரிவு

ஈரோடு: அதிமுக ஆட்சியில் ஏற்றம் அடைந்த மக்கள், திமுக ஆட்சியில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அதிமுகஇடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, வீரப்பம்பாளையம் பகுதியில் அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில், ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ. 484 கோடியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், திமுக ஆட்சி அமைந்து 21 மாதம் ஆன நிலையில், ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. இப்போது வீதி, வீதியாக வாக்கு கேட்டு வரும் அமைச்சர்கள், தேர்தலுக்கு முன்பு குறை கேட்க வரவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக அமைச்சர்கள் புரோட்டோ போட்டும், டீ போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 120 இடங்களில் கொட்டகை அமைத்து, ஏழை வாக்காளர்களை ஆடு, மாடுகளைப்போல அடைத்து வைத்துள்ளனர். திமுகவுக்கு தைரியம் இருந்தால் வாக்காளர்களை நாங்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும். அதிமுகவை எதிர்க்க தெம்பு, திராணி, சக்தி அவர்களிடம் இல்லை.

தற்போது நான் பிரச்சாரத்துக்கு வந்ததால், கொட்டகையில் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் கிடைத்துள்ளது. கொள்ளையடித்த பணம் மக்களுக்குப் போனதில் எனக்கு மகிழ்ச்சி. 2 வேளை பிரியாணி போட்டுள்ளனர். சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு, இரட்டை இலையில் வாக்களியுங்கள்.

திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதத்தில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. எழுதாத பேனாவுக்கு ரூ.81 கோடியில் கடலில் நினைவுச்சின்னம் எதற்காக அமைக்க வேண்டும். திமுக ஆட்சியில் 7 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பேனா நினைவுச்சின்னம் வைக்கும் தொகையை ஏழை முதியவர்களுக்கு கொடுக்கலாமே. இந்த தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு எழுதும் பேனா கொடுக்கலாமே.

அம்மா உணவகத்தை முடக்கப் பார்க்கின்றனர். அதிமுக ஆட்சியில் 53 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்தோம். அதை நிறுத்திவிட்டனர். உதயநிதி இங்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியத்தை சொல்லுமாறு கேளுங்கள். தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக ஸ்டாலின் பொய் சொல்கிறார்.

பொய் சொல்வதற்கு நோபல் பரிசு வழங்கினால், அதை ஸ்டாலினுக்கு வழங்கலாம். அதிமுக ஆட்சியில் மக்கள் ஏற்றம் அடைந்தார்கள். திமுக ஆட்சியில் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பெரியவலசு, குமலன்குட்டை, சம்பத் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT