குன்னூர்: குன்னூர் சித்தி விநாயகர் தெருவை சேர்ந்த சிவகாமி என்பவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக ஒரு முகவர் மூலம் மலேசியா சென்றுள்ளார்.
அங்கு தனக்கு உணவு மற்றும் இருப்பிடம் இல்லாமல் தவித்து வருவதாகவும், தன்னை மீட்க உதவுமாறு கடந்தாண்டு டிசம்பர் மாத வெளியிடப்பட்ட தொலைக்காட்சி செய்தியில் சிவகாமி தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன், இந்திய தூதரகம் மூலம் சிவகாமியை மீட்க ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து, தனது சொந்த செலவில் மலேசியாவிலிருந்து விமானம் மூலம் சிவகாமி தமிழகத்துக்கு திரும்ப அமைச்சர் ஏற்பாடு செய்திருந்தார். கடந்த 13ம் தேதி தமிழகம் திரும்பிய சிவகாமி, ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை இடைத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கா.ராமச் சந்திரனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.