தமிழகம்

‘கேட்’ ராஜேந்திரன் கொலை: முக்கிய குற்றவாளிக்கு வலை- முன்விரோதத்தால் பழிதீர்த்தது அம்பலம்

செய்திப்பிரிவு

பிரபல ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

பிரபல ரவுடி‘கேட்’ ராஜேந்தி ரனை செவ்வாய்க்கிழமை காலை பெரியபாளையம் பகுதியில், ஐந்து பேர் கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு காரிலும் மோட்டார் சைக்கிளிலும் தப்பியோடியது.

சம்பவம் நடந்து முடிந்த அரை மணி நேரத்தில் புள்ளரம்பாக்கம் பகுதியில் கொலையாளிகள் சென்ற காரை மடக்கிப் பிடித்தது போலீஸ். போலீஸாரிடம் சிக்கிய மகேஷ்(23), இம்ரான்(24), திருப் பதி(30), மணிகண்டன்(21), கார் ஓட்டுநர் அந்தோணிராஜா(31) ஆகிய ஐந்து பேரில் கார் ஓட்டுநர் அந்தோணிராஜா கொலையாளி களால் மிரட்டப்பட்டு சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டுள் ளார் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அந்தோணி ராஜா தவிர மற்ற நான்கு பேரையும் கைது செய்த பெரியபாளையம் போலீ ஸார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அவ்விசார ணையில் தெரிய வந்ததாவது:

போலீஸாரிடம் சிக்காமல், மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய திருவொற்றியூரைச் சேர்ந்த ரவுடி மகி என்கிற மகேஷ்தான் ‘கேட்’ ராஜேந்திரனை வெட்டிக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி.

`கேட்’ ராஜேந்திரனின் கூட்டாளியான சுப்பிரமணியை, கடந்த ஆண்டு மகி கொலை செய் துள்ளார். இது தொடர்பாக, `கேட்’ ராஜேந்திரன், மகிக்கு இடையே மோதல் உருவாகியுள்ளது.

எனவே, ‘கேட்’ ராஜேந்திரன் தன்னை கொலை செய்துவிடுவார் என மகி என்கிற மகேஷ் அஞ்சி யதன் விளைவாகத்தான் ‘கேட்’ ராஜேந்திரன் கொலை செய்யப் பட்டுள்ளதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

`கேட்’ ராஜேந்திரன் கொலை வழக்கில் கைதான திருப்பதி, மகேஷ், மணிகண்டன், இம்ரான் ஆகிய நான்கு பேரும் புதன்கிழமை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளில் தப்பி யோடி தலைமறைவான மகி என்கிற மகேஷை தேடி பிடிக்கும் பணியில் தனிப்படை அமைத்து போலீஸார் மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT