சென்னை: சென்னை அம்பத்தூரில் ரூ.17 லட்சத்துக்கு மேல் சொத்து மற்றும் தொழில் வரி நிலுவை வைத்துள்ள தனியார் நிறுவனத்துக்கு மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை மாநகராட்சி பகுதியில் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடமிருந்து சொத்து வரியாக ஆண்டுக்கு சுமார் ரூ.1400 கோடி வருவாய் கிடைக்க வேண்டும். நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.694 கோடியும், 2-ம் அரையாண்டில் தற்போது வரை ரூ.451 கோடி அளவில் வசூலாகியுள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை: நீண்ட காலமாக செலுத்தாத நிலுவை சொத்து வரி ரூ.350 கோடிக்கு மேல் உள்ளது. இதை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ரூ.25 லட்சத்துக்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்துள்ள 38 தனி நபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள், ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை நிலுவை வைத்துள்ள 140 பேர், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிலுவை வைத்துள்ள 321 பேர் என மொத்தம் 499 பேரின் விவரங்களை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இவர்களிடமிருந்து மட்டும் ரூ.66 கோடியே 37 லட்சம் வரிவசூலிக்க வேண்டியுள்ளது. மேலும் 5 லட்சத்து 93 ஆயிரம் பேர் ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாக சொத்து வரி நிலுவை வைத்துள்ளனர்.
இதற்கிடையில் சொத்து வரி செலுத்தாத வீடுகள் மற்றும் நிறுவனங்கள், கடைகளுக்கு சீல்வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாநகராட்சியின் மத்திய வட்டார உதவி வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் அம்பத்தூர் மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் பாலச்சந்திரன், ஆறுமுகம், லோகநாதன் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் கொண்ட குழுவினர் அம்பத்தூரில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றும் தனியார் நிறுவனத்துக்கு சீல் வைத்தனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக சொத்து வரி, தொழில் வரி நிலுவை வைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ரூ. 12 லட்சத்து 65 ஆயிரம் சொத்துவரி, ரூ.4 லட்சத்து 84 ஆயிரம் தொழில் வரி என ரூ.17 லட்சத்து 49 ஆயிரம் வரி நிலுவை வைத்துள்ளது. பலமுறை அறிவுறுத்தியும் வரி செலுத்தாத நிலையில் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது” என்றனர்.