தமிழகம்

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது: மானிய கோரிக்கை, புதிய திட்டங்கள் குறித்து முக்கிய முடிவு

செய்திப்பிரிவு

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று நடக்கிறது. இதில், மானிய கோரிக்கைகளுக்காக சட்டப்பேர வையை கூட்டுவது, நிதி ஆதாரத்துக் கான புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

2017-18ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் கடந்த மார்ச் 16-ம் தேதி தாக்கல் செய்யப் பட்டது. பட்ஜெட் மீதான விவாதத்தை தொடர்ந்து துறைகள் வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு, நிதி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டதால் பட்ஜெட் மீதான விவாதம் மட்டும் அப்போது நடந்தது. அத்துடன் பேரவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகளை நிறைவேற்று வதற்காக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் பேரவைத் தலைவர் மற்றும் செயலாளரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதற்கிடையே, அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று முன்தினம் சேலத்தில் பேசிய போது, தங்களுக்கு எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பலம் இருப்ப தாகவும், ஓபிஎஸ் அணி இணைந் தாலும் இணையாவிட்டாலும் பரவா யில்லை’ என்றார். இதனால், ஓபிஎஸ் தரப்பு கோபமடைந் துள்ளது.

மேலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நீதி கேட்டு பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந் தார். அதன்படி, காஞ்சி புரத்தில் அவர் 5-ம் தேதி பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அரசியல் பரபரப் புக்கு இடையே, தமிழக அமைச்சரவைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. முதல்வர் பழனிசாமி சேலம் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை சென்னை திரும்பினார். இதைத் தொடர்ந்து, அமைச்சரவைக் கூட்டம் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, தொகுதிகளில் நடக்கும் மே தின கூட்டங்களை முடித்துவிட்டு அமைச்சர்கள் உடனடியாக சென்னை திரும்பினர்.

முதல்வர் பழனிசாமி தலைமையில் பட்ஜெட்டுக்கு முன்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதன்பின் நடக்கும் 2-வது அமைச்சரவைக் கூட்டம் இது வாகும். இந்தக் கூட்டத்தில், மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்காக சட்டப்பேரவையை கூட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு அளிக்கும் சட்டத் திருத் தத்துக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. வரும் 7-ம் தேதி தேர்வு நடக்க உள்ள நிலை யில் இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. மேலும், வறட்சி நிவாரணம், பயிர்க் காப்பீட்டுத் தொகையை விரைவில் விடுவிக்க மத்திய அரசை வலியுறுத் துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடல், அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை ஆகியவற்றால் தமிழகத்துக்கான வருவாய் குறைந்துள்ளது. புதிய இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கும் பொதுமக்களிடம் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலை யில், அரசின் நிதி வருவாயைப் பெருக்க மாற்று திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டா யத்தில் உள்ளது.

விவசாயிகள் கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்கள் கோரிக் கைகள் தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத் தில் விவாதிக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT