சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான அரசு ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் மர்மமாக இறந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் அரசு ஒப்பந்ததாரர் சுப்ரமணியம்(58). தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய நேரத்தில் சுப்ரமணியம் வீட்டிலும் வருமான வரித் துறை சோதனை நடந்தது. தொடர்ந்து, சென்னை வருமான வரித் துறை அலுவலகத்துக்கும் 2 முறை சுப்ரமணியம் விசாரணைக்கு சென்று வந்துள்ளார். 3-வது முறையாக சுப்ரமணியம் விசாரணைக்குச் செல்ல வேண்டிய சூழலில், கடந்த 8-ம் தேதி மோகனூரில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுதொடர்பாக மோகனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், வழக்கு விசாரணை அதிகாரியாக இருந்த மோகனூர் இன்ஸ்பெக்டர் இளங்கோ திடீரென மாற்றப்பட்டார். நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
இதனிடையே, சுப்ரமணியம் இறப்பதற்கு முன் அவர் எழுதியதாகக் கூறப்படும் 4 பக்க கடிதம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானது. 3 விதமான கடிதத்தை சுப்ரமணியம் எழுதியதாகவும், அதில் ஒரு கடிதம் மட்டும் சமூக வலைதளத்தில் வெளியாகியதாகவும் தகவல் வெளியானது. எனினும், மற்ற 2 வகையான கடிதம் யாருக்கு அனுப்பப்பட்டது, அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட விவரம் எதுவும் இல்லை.
சமூக வலைதளத்தில் வெளியான கடிதம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடிதத்தில் இருப்பது சுப்ரமணியம் கையெழுத்துதான் என அவரது மகள் அபிராமி கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சுப்ரமணியம் இறப்பு தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் வழங்கப்படும். விரைவில் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்க உள்ளனர்.