சென்னை காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 14 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி 197-வது வார்டு கவுன்சிலராக கடந்த 2011 முதல் பதவி வகித்தவர் சுந்தரம். இவர் ஏற்கெனவே 2001 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் காரப்பாக்கம் பஞ்சாயத்து தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தனது பதவிக் காலத்தில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு சட்டவிரோத அனுமதிகளை வழங்கியுள்ளார். தவிர காரப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை இவரே ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வணிக வளாகம் கட்டுவதற்கும் முறையாக எந்த முன் அனுமதியும் பெறவில்லை. இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தினால் பல உண்மை கள் வெளிச்சத்துக்கு வரும். எனவே அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு, அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், நீதிபதி வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக தமிழக வருவாய்த்துறை செயலர், நில நிர்வாகத்துறை ஆணை யர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காரப்பாக்கம் சிறப்பு அதிகாரி ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கை ஏற்கெனவே நிலுவையில் உள்ள முன்னாள் மாநக ராட்சி கவுன்சிலர் அண்ணாமலை வழக்கோடு சேர்த்து விசாரிக்கும் வகையில் பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.