சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் பசுமை வழிச்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நாளை (பிப்.16) தொடங்கவுள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோரயில் திட்டம், ரூ.63,246 கோடியில்118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை (45.8 கி.மீ.) 3-வது வழித்தடம் ஒன்றாகும். இதுவடக்கு, மத்திய, தென் சென்னையைஇணைக்கும் முக்கிய வழித்தடம்ஆகும்.
அடையாறு, மயிலாப்பூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களை இணைக்கும் விதமாகஇந்த வழித்தடம் அமையவுள்ளது. முதல்கட்டமாக, மாதவரம் பால்பண்ணை பகுதியில் முதல் சுரங்கம்துளையிடும் இயந்திரம் பயன்படுத்தும் பணி அக்டோபரில் தொடங்கியது.
இதற்கிடையில், இந்த வழித்தடத்தின் பசுமை வழிச்சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக, ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.பூமிக்கடியில் முதல் சுரங்கம் துளையிடும் இயந்திரம் கடந்த மாதம் இறுதியில் இறக்கப்பட்டு, தொடர் பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், பசுமைவழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி நாளை(பிப்.16) தொடங்கவுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சுரங்கம் துளையிடும் இயந்திர பாகங்களை ஒருங்கிணைக்கும் பணி முடிந்து, பூமிக்கடியில் இறக்கப்பட்டது. பலகட்டசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
பசுமைவழிச் சாலையில் இருந்துஅடையாறு சந்திப்பு வரை சுமார்ஒரு கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை பணி நடைபெறும். ஆற்றுப்படுக்கையில் இருந்து 7 மீட்டர்கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இது மிகவும் சவாலான பணியாகஇருக்கும். இதற்காக, பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறோம் என்று அவர்கள் கூறினர்.
2-ம் கட்ட கருத்து கேட்பு: சென்னை மாநகரில் பரங்கிமலை-சென்னை சென்ட்ரல், விமானநிலையம்-விம்கோநகர் ஆகிய 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில்,கடந்த சில மாதங்களாக தினமும் 1.80 லட்சம் முதல் 2.40 லட்சம் பேர்வரை பயணம் செய்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும், அவர்களின் ஆதரவை மேம்படுத்தவும் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: முதலாவது கருத்து கேட்புகடந்த ஆண்டு நடத்தப்பட்டது. தற்போது 2-வது கருத்து கேட்புஅடுத்த வாரம் தொடங்க திட்டுள்ளோம். அதன்படி குறைந்தபட்சம் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பயணிகளுக்கு இக்கேள்விதாள் விநியோகிப்படும். அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகளின் சுயவிவரம், மெட்ரோ ரயிலை பயன்படுத்தக் காரணம் ஆகியவை கேட்டு தெரிந்து கொள்வோம்.மெட்ரோ ரயில் பயணம் எப்படி இருக்கிறது, சேவை தொடர்பான கருத்துகளையும் கேட்போம். மேலும், வசதிகளை மேம்படுத்த பொது ஆலோசனைகளை கேட்டு பதிவு செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.