டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேர்முக எழுத்தர், சட்டப்பேரவை செயலகத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில் 1,953 காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான ஆன்லைன் பதிவு ஏப்ரல் 27-ம் தேதி தொடங்கியது. தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பட்டப் படிப்பு ஆகும். வயது வரம்பு 18 முதல் 30 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், பொதுப்பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு ஏதும் கிடையாது. டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்தபடி, தேர்வுக்கு ஆன்லைனில் விண் ணப்பிப்பதற்கு நாளை (வெள் ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தைப் (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு ஆகஸ்டு 6-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. குருப்-2ஏ தேர்வுக்கு நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு பணி உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகளும், பொது ஆங்கிலம் அல்லது பொது தமிழ் (விண்ணப்பதாரர் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்) பகுதியில் 100 கேள்விகளும் ‘அப்ஜெக்டிவ்’ முறையில் இடம்பெறும். தேர்வுக்கான முழு பாடத்திட்டமும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.