திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதியில் வெங்காயம் அறுவடை தொடங்கிய நிலையில், வரத்து அதிகரித்து விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர், ரெட்டியார் சத்திரம் பகுதிகளில் பரவலாக வெங்காய சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதி வரை மழைப்பொழிவு, மேலும் பனிக்காலத்திலும் மழை பொழிவு என விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் கிடைத்ததால் விவசாயிகள் அதிகளவில் வெங்காயம் பயிரிட்டனர்.
3 மாத பயிரான வெங்காயம் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. திண்டுக்கல் அருகே குட்டத்துப்பட்டி கிராமத்தில், வெங்காய அறுவடைப் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெங்காயம் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.100 வரை விற்ற நிலையில் விவசாயிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரும் பயிராக உள்ளது. அதேபோல் ஒரு கிலோ ரூ.20-க்கும் குறைவாக விற்று இழப்பு ஏற்படுத்தும் பயிராகவும் உள்ளது.
கடந்த சில வாரங்களாக வெங்காயம் விலை இறங்கு முகத்தில் உள்ளது. ஜனவரி இறுதி வாரத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50-க்கு விற்றது. கடந்த 2 வாரங்களில் வெங்காயம் விலை படிப்படியாக குறைந்து தற்போது கிலோ ரூ.30-க்கு வெளி மார்க்கெட்டில் விற்பனையாகிறது. வெங்காய அறுவடை தொடங்கியதால், வரத்து அதிகரித்து தொடர்ந்து வெங்காய விலை சரிவை சந்திக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.
இதனால் விவசாயிகள் பராமரிப்பு செலவு, வெங்காயம் பறிக்கக் கூலி ஆட்கள் செலவு, மார்க்கெட்டுக்கு கொண்டு வர வாகனச் செலவு, கமிஷன் கடைக் காரர்களுக்கு கமிஷன் அனைத்தையும் கழித்துப் பார்த்தால் ஒரு கிலோ ரூ.25-க்கும் கீழ் மொத்த மார்க்கெட்டில் விற்பனை செய்வதால் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.