திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. தச்ச நல்லூர் மண்டலம் சத்திரம் புதுக்குளம் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனு:
குறிஞ்சி நகர் பகுதியில் குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை. அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் இணைப்புகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை. மாநகராட்சியிலிருந்து லாரி மூலம் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இது போதுமானதாக இல்லை. இப்பகுதி மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது. இது தொடர்பாக முதல்வருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய தேவை யான குடிநீர் இணைப்புகளை அனைத்து வீடுகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் திருநெல்வேலி மாநகராட்சி 14-வது வார்டு ஊருடை யார்புரம் பகுதியை சேர்ந்தவர்களும், தமிழர் விடுதலை களம் அமைப்பினரும் காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அளித்த மனுவில், ‘ஊருடையார் புரம் பகுதியில் நீண்டகாலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். பொதுபயன்பாட்டிலுள்ள கழிப்பிடங்களை சீர் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தியாகராஜநகர் பகுதி மக்கள் அளித்த மனுவில், ‘55-வது வார்டுக்கு உட்பட்ட 5-வது தெற்கு தெருவில் குடிநீர் வழங்க வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் மனு அளித்திருந்தோம்.
2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அப்போது தெரிவித்திருந்தனர். ஆனால், இதுவரை தண்ணீர் வழங்கப் படவில்லை. இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர். திருநெல்வேலி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி செயலர் ச. நிஜாம்தீன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், ‘திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
பழைய பேட்டையை சேர்ந்தவர் கள் அளித்த மனு: பழையபேட்டை சமூகரெங்கையன் கட்டளை பகுதியில் 200 வீடுகள் உள்ளன. இங்கு குடிசை மாற்று வாரியத்தால் பாதாள சாக்கடை சரிவர அமைக்கப்பபடாததால் ஓடை களில் கழிவுநீர் பெருக்கெடுத்து தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.