சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 18-ம் தேதி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத் தேர்தல் தேதி அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன.
ஜனவரி 31-ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் கடந்த 7-ம் தேதி நிறைவடைந்தது. 121 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 8-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. வேட்பு மனு தள்ளுபடி, திரும்பப் பெறுதலுக்கு பின்னர், திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உட்பட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2-ம் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் வருகை தந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 27-ம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வரும் 27-ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அத்தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அத்தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.