அமைச்சர் சரோஜா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையெனில் அவரை பதவி நீக்கம் செய்யப்படுவதுடன், சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா லஞ்சம் கேட்டதாக தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ராஜமீனாட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். தன் தந்தையிடம் பத்து லட்சம் பெற்றதாகவும், பணியிட மாறுதலுக்காக மேலும் 20 லட்சம் வேண்டும் எனக் கேட்டதாகவும் கூறியுள்ளார்.
அமைச்சரின் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியிருப்பதுடன் தனது உயிருக்கு ஆபத்து என்று மாநகர காவல்துறை ஆணையரிடத்தில் புகார் அளித்துள்ளார். தன்னிடம் பணம் கேட்டது மட்டுமின்றி, சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ரூ 2 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு தான் பணி வழங்கப் படுவதாகவும் கூறியுள்ளார்.
பொது வாழ்வு என்பது இது போன்ற ஊழல் வாதிகளால் அவலத்திற்கும், அசிங்கத்திற்கும் உள்ளாகியுள்ளது. தமிழக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருவது, அரசின் மீது பொதுமக்களுக்கு ஒவ்வொரு நாளும் அவநம்பிக்கையை அதிகரித்து வருகின்றது.
முதல்வர் மவுனம் காக்காது அமைச்சர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையெனில் அவரை பதவி நீக்கம் செய்யப்படுவதுடன், சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.