ஆந்திராவில் கூலி வேலை செய்யும் தம்பதியின் 2 மகன்களும் மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியாயினர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி சூர்யா ராவ் (45) ரவனம்மாள் (35). இவர்களுக்கு ரமேஷ் (22), ரரீஷ் (20) என 2 மகன்கள். ரமேஷ் பட்டதாரி. ரரீஷ் பிளஸ் 2 படித்தவர். மேற்கொண்டு படிக்க ரரீஷுக்கு ஆசை. குடும்ப சூழ்நிலை அதற்கு இடம் தரவில்லை. கோடை விடுமுறையில் ஒரு மாதம் மட்டும் எங்காவது வேலை பார்க்கலாம். பணம் தேற்றிக்கொண்டு வீடு திரும்பிய பிறகு, கல்லூரியில் சேரலாம் என்ற எண்ணத்தில் சகோதரர்கள் ரமேஷும் ரரீஷும் ஒரு மாதம் முன்பு மவுலிவாக்கம் கட்டிட வேலைக்கு வந்துள்ளனர்.
ஒரு மாதம் வேலை பார்த்த அவர்கள், ஞாயிற்றுக் கிழமை (கடந்த 29-ம் தேதி) ஆந்திரா திரும்ப திட்டமிட்டிருந் தனர். எதிர்பாராத விதமாக, சனிக்கிழமை மாலையில் நடந்த விபத்தில் 2 பேரும் பரிதாபமாக இறந்துவிட்டனர்.
தகவல் கேள்விப் பட்டு ஆந்திராவில் இருந்து வந்த சூர்யாராவ், தனது மகன்களின் உடல்களை வாங்குவதற்காக ராயப்பேட்டை மருத்துவமனை யில் சோகத்துடன் காத்திருந்தார். அழுதபடியே அவர் கூறியதாவது:
நானும் மனைவியும் கூலி வேலை செய்துதான் 2 மகன்களை யும் படிக்க வைத்தோம். எங்க ளின் கஷ்டத்தை பார்த்துதான் அவர்கள் 2 பேரும் கட்டிட வேலைக்காக சென்னைக்கு வந்தார்கள். அவர்களை வேலைக்கு அனுப்ப எனக்கு இஷ்டமில்லை. ஆனால், அவர் களது மேல் படிப்புக்கு உதவி யாக இருக்கும் என்பதால்தான் அனுப்பினேன். பணி முடித்து விட்டு உடனே வந்துவிட வேண்டும் என்றேன். ‘ஒரு மாதத்தில் கட்டாயம் திரும்பி விடுவோம்’ என்று ஒப்புக் கொண்டுதான் சென்னைக்குப் புறப்பட்டார்கள்.
அப்பா, அம்மாவுக்கு துணி
தினமும் வேலை முடிந்த பிறகு, எங்களுக்கு போன் செய்வார்கள். வெள்ளிக்கிழமை மாலை தி.நக ருக்குப் போய் எங்களுக்கு புது ஆடைகள், வீட்டுக்குத் தேவை யான சில பொருட்கள் வாங்கி யிருப்பதாக சொன்னார்கள். ஞாயிற்றுக்கிழமை வந்துவிடு வோம் என்று மகிழ்ச்சியோடு சொன்னார்கள்.
ஆனால், சனிக்கிழமை மாலை யில் துரதிர்ஷ்டவசமாக நடந்த விபத்தில் சிக்கிவிட்டார்கள். தகவல் கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அன்று இரவே புறப்பட்டு வந்தேன். 1-ம் தேதி என் பெரிய மகன் அடை யாளம் தெரிந்தது. 2-வது மகனாவது உயிருடன் கிடைத்துவிட மாட்டானா என்று ஏங்கியிருந் தேன். அவனும் 2-ம் தேதி பிண மாகத்தான் கிடைத்தான். என்ன செய்வதென்றே புரியவில்லை.
இவ்வாறு சூர்யா ராவ் கூறினார்.