தமிழகம்

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும்: சசிகலா உள்ளிட்ட 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு

செய்திப்பிரிவு

சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சசிகலா உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். சிறையில் இருக்கும் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வி.கே. சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்கா தீர்ப்பளித்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டு வழக்கில் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து, நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார்.

அதன்பின், குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார். இந்தாண்டு பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் நீதிபதி குன்கா தீர்ப்பை உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்டதால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சசிகலா உள்ளிட்ட மூவர் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உறுதி செய்து அளித்த தீர்ப்பில் 90 நாட்களுக்குள் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்பதன் அடிப்படையில், இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு வரும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT