மதுரை: ‘மத்திய அரசின் திட்டங்களை திண்ணை பிரச்சாரம் மூலம் வீடு வீடாக சென்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்’ என மதுரை பெருங்கோட்ட பாஜக மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை பெருங்கோட்ட பாஜக மாநில மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில தலைவி உமாரதி தலைமை வகித்தார். மாநில செயலாளர் மீனாம்பிகை வரவேற்று பேசினார். மாநில செயலாளர் ராம சீனிவாசன், மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், தாமரை புரட்சி பெண்கள் அமைப்புக்கு மாவட்டம்தோறும் அதிகளவில் உறுப்பினர்களை சேர்ப்பது, மத்திய அரசின் ஜல் ஜீவன், முத்ரா கடன் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை திண்ணை பிரச்சாரம் மூலம் மக்களிடம் பிரச்சாரம் செய்வது, பூத் கமிட்டிகளில் அதிகளவில் பெண்களை நிர்வாகிகளாக நியமிப்பது, பெண்களுக்கு எதிராக குற்றங்களை கண்டித்து போராட்டம் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து பாஜக மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.