புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட இரு வேறு சாலை விபத்துகளில் பலியான 7 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''புதுக்கோட்டை - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் பாம்பாற்று பாலம் அருகில் கடந்த 11-ம் தேதி தேவகோட்டையில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும், காரும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் காரில் பயணம் செய்த கோவில்பட்டி சக்திவேல் என்கிற அலெக்ஸ், புதுக்கோட்டை காந்திநகர் செந்தமிழ்ச்செல்வன், தென்திரையன்பட்டி பாஸ்கரன், காமராஜபுரம் பாலச்சந்திரன், கும்பகோணம் கணேசன் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் மலைக்குடிப்பட்டி கிராமம் அருகே கடந்த 12-ம் தேதி மதுரையிலிருந்து தஞ்சாவூர் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும் லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்து நடத்துநர் சுப்பிரமணியன், பேருந்தில் பயணம் செய்த ராஜமாணிக்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த செய்தியறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தோர் 7 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்துக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப விரும்புகிறேன்.
இந்த இரு சாலை விபத்துகளிலும் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்'' என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.